காயல்பட்டின உறவுமுறை சொற்கள்
உறவுமுறை சொற்கள் சமூக வாழ்வில் இருவருக்கு இடையிலான நெருக்கத்தையும் உரிமையையும் வெளிப்படுத்தக் கூடியவை, வட்டார மற்றும் சாதி அடிப்படையில் உறவுமுறை சொற்களில் வேறுபாட்டை காணலாம் அவை பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
தமிழக முஸ்லிம்களின் உறவுமுறை சொற்களை பற்றிய தகவலை தேடினால், உம்மா என்பது தமிழ் சொல்லா அறபு சொல்லா?, வாப்பா என்பது எந்த மொழிச் சொல்? என்பது போன்ற விவாதத்தை தான் காண முடியும், கூடுதலாக எந்த தகவலையும் பெற இயலாது
தமிழக முஸ்லிம்களின் உறவுமுறை சொற்களை உள் மாவட்ட முஸ்லிம் உறவுமுறை சொற்கள்,
கடலோர மாவட்ட முஸ்லிம் உறவுமுறை சொற்கள், உருது பேசுபவர்களின் உறவுமுறை சொற்கள் என்று பிரதானமாக மூன்றாக பிரிக்கலாம்
உள் மாவட்ட முஸ்லிம்களின் உறவுமுறை சொற்கள் பெரும்பாலும் கேட்டவுடனேயே தமிழ்ச்சொல் என்பது போல தோன்றக்கூடியது,
உருது பேசுபவர்களின் உறவுமுறை சொற்கள் தமிழ் திரிபுவுடன் கூடிய உருது சொல்லாக இருப்பதை உணரலாம்
ஆனால், கடலோர மாவட்ட முஸ்லிம்களின் உறவுமுறை சொற்கள் இதிலிருந்து வேறுபட்டு தோற்றம் அளிக்கும்
தமிழகத்தின் பழவேற்காடு துவங்கி கடலோரமாக கேரளம் வரையிலும் இலங்கை தீவிலும் வசிக்கின்ற முஸ்லிம்கள் வாப்பா கூட்டத்தார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்
வாப்பா கூட்டம் & அத்தா கூட்டம் என்ற பதங்கள் ஷாபிஈ அல்லது ஹனபி மத்ஹபு (சட்ட மரபை) பின்பற்றுபவர்கள் என்பதைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது
வாப்பா கூட்டத்தினர் மத்தியிலும் கூட வாப்பா, உம்மா, காக்கா, லாத்தா போன்ற பல சொற்களில் ஒற்றுமையை காண முடிந்தாலும், அவைகளுக்குள்ளேயும் ஊருக்கு ஊர் சில வேறுபாட்டை காண முடியும், இது பற்றிய ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா எனத் தெரியவில்லை,
காயல்பட்டினத்தில் ஊருக்குள்ளேயே உறவுமுறை சொற்களில் சில வேறுபாடுகளை காணலாம்
அந்த வேறுபாடுகளுக்கு காரணம், குறிப்பிட்ட ஒரு உறவுமுறை சொல்லை நாகரீகமற்ற சொல் என்றோ கொச்சையான சொல் என்றோ கருதுவது,
ஏற்கனவே வழக்கத்தில் உள்ள குறிப்பிட்ட உறவுமுறை சொல் துல்லியமாக உறவை குறிப்பிட போதுமானதாக இல்லை என கருதுவது,
பிற வாப்பா கூட்ட / கடலோர ஊர்களுடனான திருமண தொடர்பு ஆகியவை இந்த வேறுபாட்டிற்கு பிரதான காரணமாக உள்ளது
ஒரு குறிப்பிட்ட உறவுமுறை சொல்லை நாகரீகமற்ற அல்லது கொச்சையான சொல் என்றோ,
அல்லது ஒரு உறவுமுறை சொல் ஒன்றுக்கும் மேற்பட்ட உறவுகளுக்கு பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க வேண்டும் என்றோ கருதும் ஒருவர்
அதற்கு பொருத்தமாக கருதும் சொல்லை பிற வாப்பா கூட்ட கடலோர ஊர்களில் இருந்து எடுத்து தனது குடும்பத்தில் உபயோகிக்கத் தொடங்குங்குகின்றனர் அதுவே குடும்ப வழக்கமாகி அந்தப் பகுதியில் பரவுகிறது
புதிய உறவுமுறை சொல்லை உபயோகிக்க தொடங்கும் பொழுது குடும்பத்தின் மூத்த பெண்கள் (கம்மாக்க)ளிடம் இருந்து “இது நம்ம வூட்டு வழக்கம் இல்லையே” என்ற எதிர்வினை வெளிப்படுகிறது, பின்னர் அந்த குறிப்பிட்ட சொல் புழக்கத்தில் வந்து இயல்பாகி விடுகிறது
எ.கா: தாயின் தாய் – கம்மா / கண்ணு உம்மா என்பதற்கு பதிலாக மூமா / உம்மம்மா, தந்தையின் தாய் – வாப்பிச்சா என்பதற்கு பதிலாக வாப்பம்மா, தந்தையின் தந்தை – வாப்ச்சுட்டப்பா / வாப்பிச்சா வீட்டு அப்பா என்பதற்கு பதிலாக வாப்பப்பா ஆகிய சொற்கள் வெகு சமீபத்தில் புழக்கத்தில் வந்த சொற்களாக கருதப்படுகிறது
பிற வாப்பா கூட்ட ஊர்களில் திருமண உறவு ஏற்படுத்திக் கொண்டவர்கள் காயல்பட்டினத்தில் புழக்கத்தில் இல்லாத அதேசமயம் அந்த ஊர்களில் புழக்கத்திலுள்ள புதிய சொற்களை பயன்படுத்தினால், அவை காயல் உறவுமுறை சொற்கள் என்று கருதப்படுவதில்லை என்றாலும், இவ்வகை சொற்கள் நிராகரிக்கப்படுவதும் இல்லை, மற்ற ஊர்களில் திருமண உறவு கொண்டிராத வெகு சிலரும் இவ்வகை உறவுமுறை சொற்களை பயன்படுத்துகின்றனர்.
எ.கா: தந்தையின் இளைய சகோதரர் – சாச்சப்பா என்பதற்கு பதிலாக சின்னாப்பா / சின்ன வாப்பா என்ற சொல் நெசவு தெரு பகுதியில் பரவலாக புழக்கத்தில் உள்ளது.
அதேசமயம் வாப்பா கூட்டத்தை சாராத / அத்தா கூட்ட ஊர்களில் திருமண உறவு ஏற்படுத்திக் கொண்டவர்கள் அங்குள்ள உறவுமுறை சொற்களை ஊரில் பயன்படுத்தினால் அவை வெளியூர் உறவு முறைசொல் அடையாளப்படுத்தப்படுவதுடன் மற்றவர்களால் உபயோகிக்கப் படுவதும் இல்லை.
உறவுமுறை சொற்களில் மூத்தவர், இளையவர் என்று அடையாளப்படுத்துவதிலும் இரு வேறு வழமைகளை காண முடிகிறது
மூத்தவருக்கு ”பெரிய”, இரண்டாமவருக்கு “சின்ன” ஏனையோருக்கு “அவர்களின் பெயரும்” உறவுமுறைக்கு முன்னொட்டாக சேர்க்கும் வழமை உள்ளது
அதேபோன்று மூத்தவருக்கு “முத்து”, இரண்டாமவருக்கு “தங்கம்”, இறுதியானவருக்கு “செல்லம்” என்ற முன்னொட்டு சேர்த்து அழைக்கும் வழமையும் உள்ளது
ஆனால் மேற்கண்ட இரண்டாம் வழமை மாமா, மாமி, அப்பா ஆகிய உறவு முறைகளுக்கு மட்டுமே பின்பற்றப்படுகிறது, இதல்லாத மற்ற உறவுகளுக்கு பெரிய, சின்ன என்ற முன்னொட்டு சேர்க்கும் முறையே அனைவராலும் பின்பற்றப்படுகிறது
கூடுதலாக தாயின் மூத்த சகோதரிகளில் முதலாமவரை குறிப்பிட மட்டும் “முத்தா” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது
இந்த வழமை கூடுதலாக மத்திய காயல் பகுதியிலேயே புழக்கத்தில் உள்ளது
ஒன்றுவிட்ட உறவுகளை குறிப்பிடும் பொழுது யார் வழியில் உறவு ஏற்பட்டது என்பதை முன்னொட்டாக சேர்க்கப்படுகிறது
எ.கா: காக்கா வீட்டு பேரன், லாத்தா வீட்டு பேத்தி, பெரிப்பா வீட்டு காக்கா, சாச்சி வீட்டு லாத்தா
உறவினரின் மனைவியை குறிப்பிட மேற்கண்ட உறவினரின் உறவுமுறையுடன் “நாட்டி” எனும் பின்னொட்டு சேர்க்கப்படுகிறது, ஆனால் நாட்டி எனும் பின்னொட்டை நாகரீகமற்றதாக கருதுபவர்கள் அந்த உறவுமுறையை பொதுமைப்படுத்தி அழைக்கின்றனர்
எ.கா: மாமாவின் மனைவி மாமானாட்டி என்பதற்கு பதில் மாமி என்ற சொல்லை உபயோகிக்கின்றனர்.
“நாட்டி” எனும் பின்னொட்டு பெரும்பாலான ஆண் உறவுகளின் மனைவியருக்கு சேர்க்கப்பட்டாலும், தம்பி மச்சான் போன்றோரின் மனைவியருக்கு “பொண்டாட்டி” என்றே பின்னொட்டு சேர்க்கப்படுகிறது
எ.கா: தம்பி பொண்டாட்டி, மச்சான் பொண்டாட்டி
தலைமுறையை குறிக்கும் உறவுமுறை சொற்களில் மகன்/மகள், பேரன்/பேத்தி, பூட்டன்/பூட்டி, ஓட்டன்/ஓட்டி, ஒப்பாட்டன்/ஒப்பாட்டி ஆகிய சொற்கள் முறையே பயன்படுத்தப்படுகின்றன
பின் தலைமுறை மக்கள் முன் தலைமுறையினரை அழைப்பதற்கு பெண்பால் உறவுமுறை சொல்லுடன் ஆண்களுக்கு “அப்பா” என்றும் பெண்களுக்கு “கம்மா” என்றும் பின்னொட்டாக சேர்த்து அழைக்கின்றனர்
எ.கா: பூட்டியப்பா, ஓட்டி, கம்மா என்பன போன்று
உறவினர் அல்லாத உறவு முறையாக தந்தை, தாய் மற்றும் தாயின் தாய் ஆகியோரது ஒத்த பாலின தோழர்களை தோழன் / தோழி என்ற முன்னோட்டோடு அவர்களின் உறவு முறையும் சேர்த்து அழைக்கப்படுகிறது
எ.கா: தந்தையின் தோழருக்கு தோழப்பா, தோழ வாப்பா , தாயின் தோழிக்கு தோழிமா என்றும் அழைக்கப்படுகிறது.
அன்றாடம் உபயோகிக்கும் உறவு முறை சொற்களில் ஒரு ஊரில் மட்டுமே இவ்வளவு நுண்ணிய வித்தியாசங்களை அறியமுடிகிற பொழுது தமிழகம் தழுவிய அளவிலோ அல்லது இலங்கையையும் உள்ளடக்கியோ முஸ்லிம் உறவு முறை சொற்கள் பற்றியோ முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படும் பொழுது இன்னும் பல தகவல்களைப் பெற முடியும்
கால சூழல்களால் ஏற்படுகின்ற உறவு முறை சொற்களின் மாற்றத்தை ஒரு சொல்லின் மாற்றமாக மட்டும் கருதவியலாது, அதில் நமது வாழ்வியல் முறையின் மாற்றமும் கூடவே அடங்கியிருக்கிறது.
குறிப்பு: இதோடு காயல்பட்டின உறவுமுறை சொற்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment