காயல்பட்டினிகளின் பட்கல் பயணம்


பட்கல், இந்தியாவின் மேற்குக் கரையோரம் உத்தர கர்நாடகத்தில் அமைந்துள்ள நகரம்


ஓரிருமுறை மறைந்த காயல் வரலாற்றாசிரியர் அப்துல் லத்தீப் ஹாஜியார் "பட்கல் அப்படியே நம்ம ஊரு மாதிரி தான் இருக்கும்" என்று கூறியிருக்கிறார். எகிப்திலிருந்து புறப்பட்டு காயல் வந்த கப்பலோடு 4 கப்பல்கள் புறப்பட்டதாகவும் அதில் ஒன்றில் பயணித்தவர்கள் பட்கலில் கரை ஒதுங்கிய தாகவும் ஒரு செவிவழிச் செய்தி உண்டு. மேற்கொண்டு பட்கல் பற்றி எதையும் அறிந்திருக்கவில்லை.



கொரோனா முதல் அலை ஓய்ந்த சமயத்தில் காயல் பாரம்பரிய நடைக்காக பஷீராக்காவிடம் (சாளை பஷீர்) அறிமுகமாகி பின்னர் காயல்பதி குழும செயல்பாடுகளின் மூலம் நெருக்கம் உண்டானது.


சென்னையில் இருக்கும் பொழுது தொண்டியார் பேட்டை ஸூபி ஞானி. குணங்குடி மஸ்தான் ஸாஹிப் நினைவிடம், திருவல்லிக்கேணி முஹம்மடன் லைப்பரேரி, அறபு குடியேற்ற பகுதிகளில் ஒன்றான பழவேற்காடு என அருகிலிருக்கும் சிறிய இடங்களுக்கு அழைத்துக் கொண்டிருந்தவர் திடீரென பட்கல் பயணத்திட்டத்தை முன்வைத்தார்.


தோழமார்களோடு ஊட்டி முதல் உம்றா வரை வாய் வழியாகவே பயணித்து பழக்கப்பட்ட நான் அதே நினைப்பில் பட்கல் பயணத்துக்கும் சம்மதம் சொல்லி வைத்தேன்


சிறிது நாட்களுக்கு பயண பேச்சு எதுவும் இல்லாமல் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது இடையிடையே பேச்சு வந்தாலும் திட்டமிடல் அளவுக்கெல்லாம் செல்லவில்லை, இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் பஷீராக்கா தடாலென பயணத்திட்டத்தை முழுமையாக கூறினார்.


பிறகுதான் இவர், போடும் பயணத்திட்டத்தை நிறைவு செய்யும் கோஷ்டி என்பதை உணர்ந்து கொண்டேன், பயணத்திற்கு சம்மதம் கூறிய பிறகு நழுவுவதற்கும் மனமில்லை


போவதற்கும் ஆசைதான், பயணத்தில் அன்கிள் வயது ஆட்களோடு செட்டாகுமா என்ற யோசனை வேறு, காயல்பதி குழுவில் துணைக்கு இருந்த இப்றாஹீம் அன்ஸாரிக்கும் பயணிக்க முடியாத சூழல். சரி கய்று, பயணிப்பவர்கள் அனைவரும் வரலாறு & மரபுசார்ந்த ஞானம் உடையவர்கள் என்பதால் அவர்களிடமிருந்து கொஞ்சமேனும் தகவல்களை திருடிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தயாராக தொடங்கினேன்.


கிளம்புவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் எதிர்பாராதவிதமாக நான் பயணத்துக்கு அழைத்து வர மறுத்துவிட்ட கூட்டாளி ஷேக் அப்துல் காதிர் மிஸ்பாஹீ பயணத்தில் உடன் வருவதாக பஷீர் காக்கா சொன்னவுடன் அத்தனை தயக்கமும் நீங்கியது



நவம்பர் 31 பஷீராக்கா, மிஸ்பாவுடன் ஊரிலிருந்து கிளம்பி திருச்செந்தூர் – நாகர்கோயில் பஸ் பயணம் பின் நாகர்கோவிலில் இருந்து மிடாலம் அன்ஸார் காக்கா உடன் பட்கல் போக ரயிலேறினோம் ஸுல்த்தான் ஆலிம் கோழிக்கோட்டில் இணைந்துகொண்டார்


மறுநாள் காலை பட்கலுக்கு அருகிலுள்ள மூகாம்பிகா ரோடு ரயில் நிலையம் வந்து அங்கிருந்து பட்கலுக்கு ஸுல்த்தான் ஆலிம் அவர்களுக்கு அறிமுகமானவர்கள்  

மூலம் ஏற்பாடான தங்குமிடத்திற்கு மகிழுந்தில் அழைத்துச் செல்லப்பட்டோம் அது ஒரு மத்றஸாவின் கெஸ்ட் ஹவுஸ். நான்கைந்து மத்றஸாக்களில் தாவித்தாவி ஓதி இருந்தாலும் அந்த (ஜாமிஆ இஸ்லாமிய்யா பட்கல்) மத்றஸா ஒரு பிரம்மாண்டத்தை உணர வைத்தது.


எகிப்திலுள்ள அல் அஸ்ஹற் பல்கலைக்கழகத்துக்கு அடுத்து ஷாபிஈ பிக்ஹை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இரண்டாவது பெரிய இஸ்லாமிய பல்கலைக்கழகம் இது என அங்குள்ள ஒருவர் தெரிவித்தார் பிற தென்னிந்திய கடற்கரையோர மக்களைப் போன்று பட்கல் வாசிகளும் ஷாபிஈ மத்ஹபை பின்பற்றுபவர்கள் தான்


உண்மையில் மத்றஸாக்கள் & மற்றும் ஆலிம்கள் பற்றிய எனது ஸ்டீரியோடைப் - ஐ பட்கல் ஜாமிஆ (மத்றஸா) உடைத்தது என்றுதான் கூற வேண்டும் ஆயிரத்திற்கும் நெருக்கமான மாணவர்கள் எண்ணிக்கையோடு இயங்கும் மத்றஸா அதிலும் அதிகமான மாணவர்கள் டேஸ்காலர்-கள் என்பது ஆச்சரியமாகவே இருந்தது. நாங்கள் போன நேரம் மத்றஸாவிற்கு பைக்கிலும் மத்றஸாவுக்கென இருக்கும் வேன்களிலுமாக மாணவர்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தனர்


கெஸ்ட் ஹவுஸின் வண்ண வேலைபாடுடன் கூடிய விரிப்பும் சாய்வுக்கு தாலவாணிமாக அமைக்கப்பட்டிருந்த மஜ்லிஸ் பாணி உணவருந்தும் அறையில் காலை பசியாற, உணவு வயிற்றை நிரப்பியது போல அறை சூழல் மனதை நிரப்பியது.


பிறகு ஜாமியா முதல்வருடன் சிறு கலந்துரையாடல் அன்றைய நாள் முழுவதும் ஜாமிஆ மற்றும் அதன் துணை நிறுவனங்களை கண்டு வியப்பதிலேயே கழிந்தது, முழுக்க முழுக்க லக்னோ நத்வதுல் உலமாவின் வழிகாட்டுதலில் நடத்தப்படுகிறது மார்க்கக் கல்வி – பொதுக்கல்வி இணைப்பு என்பது இங்கு இல்லை என்றாலும் மார்க்கக் கல்வியை மேம்பட்ட தரத்தில் கற்பிக்கிறார்கள்


இணையவழி இஸ்லாமிய கல்வி, இணைய ஊடகம் (WebTv) என நவீன தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை ஆலிம்கள் செய்து கொண்டிருந்தது வியப்பளித்தது



பயணத்திற்கு முன்பே பஷீராக்கா பட்கல் பற்றி இணையத்தில் கிடைக்கும் தகவல்களை வாசித்து அறிந்து வைத்துக்கொள் என்றார், அதன் போது தான் பட்கலிகள் நவாய்தி இனக் குழுவினர் என்றும் நவாய்த்தி மொழிதான் அவர்கள் தாய்மொழி என்பதையும் அறிந்து வைத்திருந்தேன், ஆனால் நாங்கள் அங்கிருந்த வரையில் அதிகமாக எங்களது காதுகளில் விழுந்தது என்னவோ உருது மொழிதான், உருது மொழி தோற்றத்திற்கு முன்பிருந்தே நவாய்த்தி மொழி பாரசீக லிபியை கொண்டே எழுதப்படுகிறதாம், அவர்கள் நவாய்த்தியில் மட்டுமே பேசுவார்கள் என்ற நினைப்பில் இருந்த எனக்கு அவர்கள் உருது மயப்பட்டிருந்தது ஏமாற்றம் அளித்தது


முதல் நாள் மஃங்ரிபு தொழ ஒரு பள்ளிக்கு சென்றோம் வானளாவிய மினாராக்களுடன் கம்பீரமாய் கட்டப்பட்டிருந்தது, பட்கலின் ஏனைய பள்ளிகளும் கூட அளவில் சிறியதாகவே இருப்பினும் நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கிறது.


வெளியூர் பள்ளிவாசல்களுக்கு செல்லும்போது அவ்வூராரின் புதுவித சாடை மற்றும் உடையமைப்பு எனக்கு சிறிதேனும் அந்நிய உணர்வை ஏற்படுத்தும் ஆனால் அது போன்ற உணர்வு ஏற்படவே இல்லை.


அன்றாடம் நான் காயலில் காணும் டி-ஷர்ட்டும் சிலோன் பாணி கலர் வேட்டியும் அணிந்த என் வயதொத்தவன் பள்ளிக்கு வெளியில் மொபைலையும் வேட்டியின் ஒரு பகுதியையும் ஒரே கையில் பற்றிக்கொண்டு சகாக்களுடன் கதைத்துக் கொண்டிருக்கும் காட்சியை பட்கலில் காணுகின்ற எனக்கு அந்நிய உணர்வு ஏற்படாதது ஆச்சரியப்படத்தக்கதல்ல தான்


இரண்டாம் நாள் மாலை பழைய பட்கலில் அடங்கியிருக்கும் காயலை பூர்வமாகமாக கொண்ட ஸூபி ஞானி. ஷெய்கு ஸாலிஹ் தங்கள் அவர்களின் நினைவிடம் சென்றோம். எந்தவித பராமரிப்பும் இன்றி கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. தர்காக்களில் சில வரம்பு மீறல்கள் நடப்பதை தடுப்பதில் தவறில்லை ஆனால் அதை மொத்தமாக இழுத்து மூடுவது என்பது அது சார்ந்திருக்கும் வரலாற்றை மண் போட்டு மூடுவதற்கு சமம்


மஃங்ரிபுக்கு பின் சில ஊர் பிரமுகர்களை சந்தித்தோம் தர்காவின் நிலைப்பற்றி எடுத்துக் கூறியதும் அதை சீர் அமைப்பதாக உறுதி அளித்தனர்.


பட்கலிகள் தங்களது முன்னோர் எமனில் இருந்து வந்ததாக கூறுகின்றனர், எகிப்திலிருந்து நான்கைந்து கப்பலில் வந்தது போன்ற செவிவழிச் செய்திகள் அங்கு இல்லை. என்றாலும் காயல் பண்பாட்டுக்கும் அவர்களுக்கும் நிறைய ஒற்றுமைகளை காணமுடிந்தது. கல்யாணத்திற்கு பின் பெண் வீட்டிற்கு செல்வது, சாட்டு மாத்து (பெண் கொடுத்து மாப்பிள்ளை எடுத்தல்) போன்றவை அதில் அடக்கம்.


இரவு நவீன பாடத்திட்டத்துடன் நடத்தப்படும் சிறுவர்களுக்கான பள்ளி (மக்தப் மத்றஸா) க்கு சென்றோம், சிறுவர்களுக்கான நூலகம் மற்றும் ஒளிப்பதிவு கூடமும் கூடவே அமைக்கப்பட்டிருந்தது, கார்வான் அத்பால் எனும் உருது பாடலை ஒரு மாணவன் தனது கீச் குரலில் பாடினான், அர்த்தம் புரியவில்லை இருந்தும் பட்கலில் இருக்கும் வரை அந்த பாடல் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது


மூன்றாம் நாள் ஸுபுஹுக்கு பின் அருகிலுள்ள மலைக்கு பயணமானோம் அதிகாலை நேர சில்லென்ற காற்றும் காரில் சாச்சப்பா போட்ட பய்தும் ஒரு பரவச நிலையை உண்டு பண்ணியது (பட்கல் முழுக்க எங்களை வாகனத்தில் அழைத்துச் சென்றவரை நானும் மிஸ்பாவும் அப்படித்தான் அழைத்துக் கொண்டோம்)


பட்கலிகள் பலரிடம் தமிழில் பேசி குழப்பிக் கொண்டிருந்த பஷீராக்காவுக்கு முதன்முறையாக ஒரு மலை கிராமத்து பெண் புரிந்துகொண்டு செய்கையில் தொங்கு பாலத்துக்கு வழிகாட்டியதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்


பஷீராக்கா அகவை 50-ஐ கடந்தவர் தான், முதுமையை நெருங்கியவர் என்றெல்லாம் அவரை நிச்சயம் சொல்ல இயலாது, மனிதர் அவசர குடுக்கை மன்னிக்கவும் சுறுசுறுப்பின் முழுவடிவம், கையில் கம்பு வைத்திராத மேய்ப்பராகவே பயணம் முழுவதும் செயல்பட்டார்


ரொம்ப ரொம்ப திட்டமிடுவார், சில நேரம் அது நமக்கு அலுப்பை ஏற்படுத்தும், அவரது திட்டமிடல் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே ஏதாவது சம்பவம் நிகழும், தனது செயலை நியாயப்படுத்துவதற்காக அந்த அவந்தர சூழலை பயன்படுத்திக் கொள்வார்


தொங்கு பால தரிசனத்துக்கு பின் கடற்கரையை நோக்கி நகர்ந்தது வண்டி, கடற்கரையோரம் உள்ள ஒரு குன்றின் மீது சிறிய அளவிலான கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது, மைல் கணக்கில் ஒளிவீசும் கலங்கரை விளக்கத்தின் பல்பு இவ்வளவு மிச்சிகானாக இருக்கும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை, அதன் செயல்பாட்டை முழுமையாக விவரித்தார், அதன் ஊழியர்


அன்று வெள்ளிக்கிழமை என்பதால் வேகமாக இடத்தை விட்டு நகர்ந்து பழைய பட்கலில் உள்ள குத்பா பள்ளிக்கு சென்றோம், வெண்ணிற வேட்டி சட்டைகள் அணிந்த அரபிகளால் நிறைந்திருந்தது பள்ளி, தொழுகைக்கு பின் எங்களுக்கு உள்ளூர் ஆலிம் ஒருவர் அறிமுகமானார், பல வரலாற்றுத் தகவல்களை அள்ளித்தெளித்தார்.


அதுவரை நாங்கள் சந்தித்த பட்கலிகள் பெரும்பாலும் தங்களது வரலாற்றை அவ்வளவாக அறிந்திருக்கவில்லை அல்லது எங்களுக்கு அவை பற்றி தெளிவாக கூறவில்லை, ஆனால் இந்த ஆலிம் சில மணி நேரங்களிலேயே பல முக்கியமான இடங்களுக்கு அழைத்துச் சென்றார், அதில் ஹஸனுல் பன்னா நூலகமும் ஒன்று அங்குள்ள ஒரு நூலில் காயல்பட்டினத்தை சார்ந்த ஒருவரது பெயர் காயல்பட்டினி என்ற பின்னொட்டுடன் குறிப்பிடப்பட்டிருந்தது


பொதுவாக காயல்பட்டினத்தை சார்ந்தவர்கள் காஹிரி என்று அறியப்படுகின்றனர்


ஆலிமுடன் இருந்த சில மணி நேரங்கள் தான் உள்ளபடியே பட்கல் பயணத்தை முழுமையாக்கியது.



மஃங்ரிபுக்கு பின் பட்கலில் இருந்து புறப்படும் முன் கடைசியாக சாச்சப்பாவை ஆரத்தழுவி விட்டு கேரளத்துக்கு இரயிலேறினோம் கார்வான் அத்பால் பாடல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.


படங்கள்: மிஸ்பாஹி

Comments